எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?

by Srinivasan
19 minutes
எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?

மக்களின் அன்றாட இயல்பு  வாழ்க்கை COVID-19 சர்வதேச தொற்றால் சீர்குலைந்து உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர  இந்திய  அரசால் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இக்கடுமையான சூழ்நிலையில் பல மொபைல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்து உள்ளது. இங்கே மொபைல் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ள நிறுவனங்கள் மற்றும் அதனுடைய நீட்டிப்பு நாட்கள் குறித்து விரிவாக காணலாம்.

சாம்சங் (Samsung)

சவுத் கொரியாவின் ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங்  தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு தரும் விதமாக தமது ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை மே 31, 2020 வரை நீட்டித்து உள்ளது. மார்ச் 20, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை வாரண்ட்டி காலாவதியாகும் அனைத்து சாம்சங் தயாரிப்புகளிலும் நீட்டிப்பு செல்லுபடியாகும்.

ஒன்பிளஸ் (OnePlus)

ஒன்பிளஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களுக்கான வாரண்ட்டி நீட்டிப்பை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி மார்ச் 1, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை வாரண்ட்டி காலாவதியாகும் ஸ்மார்ட்போன்களுக்கு வாரண்ட்டி மே 31, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹானர் (Honor)

ஹானர் நிறுவனம் மார்ச் 21, 2020 முதல் ஜூன் 21, 2020 வரை வாரண்ட்டி காலாவதியாகும் தமது தயாரிப்புகளுக்கு ஜூன் 30, 2020 வரை வாரண்ட்டி காலத்தை நீட்டித்துள்ளது.

ரியல்மீ  (Realme)

ரியல்மீ  இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக ஸ்மார்ட் போன்களுக்கு வாரண்ட்டி நாட்களை நீட்டித்து இருப்பதை அறிவித்துள்ளது. இதன்படி வாரண்ட்டியின் கடைசி நாள் மார்ச் 20, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை இருப்பின் அது மே 31, 2020 வரை நீட்டிக்கப்படும்.

விவோ (Vivo)

விவோ நிறுவனத்தின் அறிவிப்பின் படி விவோ ஸ்மார்ட்போன் பயனர்கள் 90 நாட்களுக்கு வாரண்ட்டி நீட்டிப்பைப் பெறலாம். வாரண்ட்டியின் கடைசி நாள் மார்ச் 1, 2020 லிருந்து மே 31, 2020 வரை இருப்பின் அந்த ஸ்மார்ட் போனுக்கான வாரண்ட்டி 90 நாட்கள் நீட்டிக்கப்படும்.

ஓப்போ (Oppo)

ஓப்போ நிறுவனமும் வாரண்ட்டி நீட்டிப்பைப் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் மார்ச் 23, 2020 லிருந்து மே 30, 2020 க்குள் வாரண்ட்டி கடைசி நாளாக இருந்தால் அந்த ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணைக்கருவிகளுக்கான வாரண்ட்டியின் கடைசி நாள் மே 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐகிஉ (IQOO)

COVID-19 முடக்குதலுக்கு முன்பு IQOO 3 ஸ்மார்ட்போன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு IQOO இந்தியா 90 நாட்கள் வரை வாரண்ட்டியை நீட்டித்துள்ளது.

ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களான லாவா (Lava), டெக்நோ (Techno) ,நோக்கியா (Nokia) மற்றும் இன்பினிக்ஸ் (Infinix) ஆகியவையும் தமது ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை 2 மாதமும், மோட்டரோலா (Motorola) மற்றும் லெனோவா (Lenova)  நிறுவனங்கள் 75 நாட்களும் நீட்டித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.